இறக்கும் தருவாயில் இருந்தது
காட்டாற்று வெள்ளத்தில்
இழுத்து வரப்பட்டு
சமவெளி அடைந்து
தூக்கியெறியப்பட்ட
பெருமரமொன்று…
புதிதாய் முளைத்த
சிறு செடியொன்று
பரிதாபத்துடன் வினவியது…
“வாழ்வு முடிந்து வாடப்போகும் பெருமரமே…
உன்னைப்போல்
வீழாதிருக்க வழியிருந்தால்
எடுத்துக்கூறு….
பூமி உள்ள மட்டும் பூத்துநான் குலுங்கிடவே…
பாழும் காற்றுக்கும் புயல் மழைக்கும் அஞ்சாமல் நான் வாழ்ந்திடவே”
அனுபவ மரமோ அமைதியாய் சொன்னது….
“சிறுசெடியே….
நான் வாழ்ந்த காலம் என்னவென்று எனக்கேத் தெரியாது….
அறுத்துப்பார்த்தால் ஆண்டுவளையம் வயதினைக் கூறலாம்…
காட்டுமரம் நான்…
கடும்புயலுக்குக் கலங்கியதில்லை….
பெருமழைக்கென்றும் நடுங்கியதில்லை…
இவ்விரு காரணிகளும்
என்றென்றும்
என் பெருநன்றிகுரியவையே….
இவைகள்தான் என்னை வலுவாக்கின…
உன்னைப்போல் சிறு செடிகள் உருவாக்க…
மேலும்
என்னுள் உயிர்த்த விதைகளை
பூமியெங்கும் எடுத்துச்சென்று என்னைப்போல் மரமாக்கின….
உனக்குமெனக்கும் என்ன தெரியும்….
நீயும் கூட என் வழி உயிராக இருக்கக் கூடும்….
கேட்டதால் கூறுகிறேன்…
அன்புச்செடியே…
வலி மட்டுமே வாழ்வில்லை…
வலிகளில்லாமலும் வாழ்வில்லை…
வலிகளைத் தாங்கும் வழி எது தேடு…
நம்பிக்கை கொள்..
பட்டமரமும் துளிர்விடும்.
வெட்டிய கிளையும் மரமாகும்…
பூமியிருக்கும் வரை எதற்கு…
இயன்றவரை இருந்திடுவோம்…
இறக்கும் வரை
எல்லோருக்கும் ஏதேனுமுதவிடுவோம்…
என்னால் விளைந்த பயன் நீ என்றால்
உன்னால் விளையும் பயன்
யாதென யோசி….
மீளச் சொல்கிறேன்….
நீ வாழ்ந்து நான் வாழ்வேன்….
நீ வாழ யார் வாழவேண்டும்
என்பதையும் நீயே யோசி!”
சக்தி